ஸ்ரீ அனுமன் சாலீசா(அனுமன் நாற்பது ) (HANUMAN CHALISA)


ஸ்ரீ அனுமன் சாலீசா

ஸ்ரீ ஹநூமதே நம:

ஸ்ரீ ஹநுமாந் சாலீஸா

(அனுமன் நாற்பது )

தோஹா 1

ஸ்ரீ குருவின் பாதாரவிந்தங்களின் மகரந்தப் பொடிகளால் என் மனக் கண்ணாடியைத் தூய்மைப்படுத்தி நான்கு விதமான தர்மம், அர்த்தம், காமம்,மோஷம் )புருஷார்த்தங்களையும் கொடுக்கும்.

ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் நிர்மலமான புகழை வர்ணிக்கிறேன். 

தோஹா 2

ஹே வாயுகுமாரனே!  நான் தங்களைத் தியானம் செய்கின்றேன். என்னுடைய உடலும் அறிவும் பலம் குறைந்தவை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனக்கு உடல் ஆற்றலையும் ,நல்ல புத்தியையும், அறிவையும் கொடுங்கள் என்னுடைய அனைத்து க்லேசங்களையும் ,விகாரங்களையும் அழித்துவிடுங்கள்.

(க்லேசம்- அறிவு இன்மை, அதாவது அவித்யா. ராக,  த்வேஷ் , அபிநிவேச -க்லேசங்கள் , விகாரங்கள் - பிறப்பு , இறப்பு என்கின்ற சம்சாரமாகிய கடலின் துன்பச் சுழற்சியில் இருந்து விடுபடுதல், இதற்கு ஆறு மாற்றங்கள் உண்டு.)

சௌபா ஈ

1.    1.   ஸ்ரீ ஹனுமான் அவர்களே! தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும் .   தங்களுடைய ஞானமும்,  குணமும் ஆழம் காண முடியாதவை.               வானரத் தலைவனே. வாழ்க! வாழ்க ! மூன்று உலகங்களிலும் உங்களுடைய புகழ் பிரககாசிக்கிறது.

1.    2.   ராம தூதனே!  தாங்கள் ஈடு இணையற்ற பலம் உடையவர்.  அஞ்சனை புத்திரன் என்றும் , வாயுகுமாரன் என்றும் புகழ் பெற்றவர்.

1.      3. தாங்கள் மஹாவீரர், அளவற்ற பராக்கிரமம் உடையவர், வஜ்ரம் போன்ற அவயங்கள் கொண்டவர். கெட்ட புத்தியை நீக்கி, நல்ல புத்தியை கொடுத்து அன்பர்களுக்கு உதவி செய்கின்றீர்கள்.

1.   4. பொன்னிறமான உடல்,  காதுகளில் குண்டலம் , சுருண்ட செந்நிறமான கேசம்,  இத்தகைய உருவத்துடன் மிக அழகாக விளங்குகிறீர்கள்.

1.   5. தங்கள் கையில் வஜ்ராயுதமும், கொடியும் காட்சி அளிக்கின்றன. தோளில் தர்ப்பத்ததாள் ஆன முப்புரி அணிந்து கொண்டுருக்கீறீர்கள்.

1.      6. தாங்கள் உண்மையில் சிவபெருமானின் அவதாரமே! (சுவனமே!) அதாவது- மிகவும் பரிசுத்தமான, அழகான, ஏகாந்தமான கைலாச பர்வதத்தின் சிகரத்தில் தாங்கள் நிரந்தமான ராமநாம ஜபம் செய்கின்றீர்கள். தங்கள் இருதயமாகிய வனத்தில் பகவான் ஸ்ரீ ராமன் எப்போழுதும் உலவிக் கொண்டிருக்கிறார். சாட்சாத் ஸ்ரீ ராமனின் அவதார சமயத்தை அறிந்து சுயம் பரமேஸ்வரனாகிய தாங்களே ஸ்ரீ ராமனின் கைகரியத்திற்க்காக கேசரியின் மைந்தனாக அவதாரம் செய்தீர்கள். கேசரியின் மைந்தரே! தாங்கள் தேஜஸினாலும், பராக்கிரமத்தினாலும் மிகவும் உயர்வந்தவர். உலகம் அனைத்திலும் தாங்கள் வணங்கப்படுகின்றீர்கள்.

1.      7தாங்கள் ஆழம் காண முடியாத கல்விக்கடல். நற்குணங்கள் நிரம்பியவர். செயலாற்றுவிதில் மிகுந்த திறமை உடையவர். ஸ்ரீ ராமனுக்குப்  பணிபுரிவதில் எப்பொழுதும் நாட்டம் கொண்டவர்.

 8.  தாங்கள் ஸ்ரீ ராமனுடைய திருக்கல்யாண குணங்களைக் கேட்பதில் மகிழ்ந்து இருக்கின்றீர்கள். ஸ்ரீ ராமர், சீதாதேவி, ஸ்ரீ லஷ்மணன் தங்கள் இதயத்தில் குடி கொண்டுள்ளார்கள். மேலும் ஸ்ரீ ராமர் சீதை இதயங்களில் தாங்கள் குடி கொண்டுள்ளீர்கள்.

1.    9தாங்கள் மிக சிறிய உருவம் எடுத்து சீதைக்குக் காட்டினீர்கள். பயங்கரமான உருவம் எடுத்து இலங்கையை கொளுத்தினீர்கள்.

1.  10. தாங்கள் மிகவும் பயங்கரமான உருவம் எடுத்து அரக்கர்களை ஆழித்தீர்கள்; இவ்விதமாக ஸ்ரீ ராமபிரானின் காரியங்களை நிறைவேற்றினீர்கள்.

11. தாங்கள் சஞ்ஜீவினி மலையைக் கொண்டு வந்து லஷ்மணனை உயிர்ப்பித்தீர்கள். ஸ்ரீ ரகுவீரன் மகிழ்ச்சி அடைந்து தங்களை மார்போடு அணைத்துக் கொண்டார்.

12. ஸ்ரீ ராமபிரான் நீ எனக்கு பரதனைப்போல அன்புள்ள சகோதாரன் என்று கூறி, தங்களை மிகவும் புகழ்ந்து கொண்டாடினார்.

13. உன்னுடைய புகழை ஆயிரம் நா படைத்த ஆதிசேஷன் பாடிக்கொண்டு இருக்கட்டும் என்று கூறி, சீதாப்பதியாகிய ஸ்ரீ ராமச்சந்திரன் மிக மிக அன்போடு உங்களை மார்போடு தழுவிக் கொண்டார்.

14. ஸனகாதி முனிவர்கள், ப்ரம்மா முதலிய தேவர்கள், நாரதர் போன்ற முனிவர்கள், சரஸ்வதிதேவி மற்றும் ஆதிசேஷன்.

15.  மேலும் யமராஜன், குபேரன் முதலிய எல்லா திக்பாலர்கள், கவிஞர்கள், வித்வான்கள், பண்டிதர்கள் ஆகியோர் எவ்வளவு புகழ்ந்தாலும் உங்களது பெருமைக்கு எல்லை ஏது?.

16. தாங்கள் சுக்ரீவனுக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்து இருக்கிறீர்கள்! அதாவது ஸ்ரீ ராமரோடு கூட்டி வைத்தீர்கள். மேலும் அவரை அரசனாக்கினீர்கள்.

17. உங்களுடைய ஆலோசனையை விபீஷணர் ஏற்றுக்கொண்டார். அதனால் அவர் இலங்கையின் அரசர் ஆனார். இவையனைத்தும் எல்லா உலகும் அறியும்.

18. ஈராயிரம் யோஜனைக்கு அப்பால் இருந்த சூரியனைத் தாங்கள் ஒரு இனிய பழம் என்று கருதி, அதனிடம் நெருங்கிச் சென்றுவிட்டீர்கள்.

19.  தாங்கள் பிரபு ராமச்சந்திரனின் கணையாழியை திருவாயில் வைத்துக் கொண்டு சமுத்திரத்தை அனாயாசமாகத் தாண்டினீர்கள் என்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.

20.   உலகத்தில் எவ்வளவு கடினமான காரியங்கள் இருந்தாலும், தங்கள் அருளினால் அவை எளிதாகவே நடந்து விடுகின்றன.

21.   நீங்கள் ஸ்ரீ ராமச்சந்திரனுடைய வாயிற்காப்பாளர், தங்கள் கருணையில்லாமல் யாரும் அதனுள் நுழைய முடியாது.( ஸ்ரீ ராமருடைய அருளைப் பெறுவதற்கு முதலில் தங்களின் அருள் பெற வேண்டும்.)

22.  தங்கள் திருவடிகளை யார் வந்து அடைந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் ஆனந்தம் கிடைக்கிறது. தாங்கள் காப்பாளராக இருக்கும்போது நாங்கள் எதைக் கண்டு பயப்படவேண்டும்?

23.  தங்களிடம் உள்ள மிகுதியான தேஜஸை தங்களைத் தவிரவேறு யாராலும் தாங்கவே முடியாது. ஹும் என்ற கர்ஜனையால் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. மஹாவீரனே!  உமது பெயரை யார் கூறினாலும் அதைக்கேட்ட மாத்திரத்தில் பூதம், பிசாசுகள் தங்கள் நாமத்தைச் சொன்னவர் அருகில்கூட நெருங்குவதில்லை.

25. வீர ஹனுமானே! தங்கள் பெயரை இடைவிடாது ஜபம் செய்வதினால் எல்லா துன்பங்களும் க்லேசங்களும் அகன்று விடுகின்றன.

26. ஹே ஹனுமானே! மனதாலும், செயலாலும், சொல்லாலும் எவர் தங்களிடமே ஈடுபட்டு இருக்கிறார்களோ, அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலிருந்தும், தாங்கள் அவர்களை விடுவிக்கிறீர்கள்.

27.  எல்லாவற்றிற்கும் மேம்பட்ட பரம்பொருளாகவும், தவம் செய்பவர்களில் சிறந்தவராகவும் விளங்குகின்ற ஸ்ரீ ராமா பிரானின் ஸகல காரியங்களையும் நீங்கள் செவ்வனே நிறைவேற்றியுள்ளீர்கள்.

28.  தங்களை வழிபடுகின்றவர்களுடைய எல்லா கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன. வாழ்க்கையில் மதிப்பிட முடியாத பலன்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன.

29.  நான்கு யுகங்களிலும் தங்களுடைய பிரதாபம் பரந்து இருக்கின்றது. உலகத்தில் தங்களுடைய புகழ் எல்லா இடத்திலும் ஒளிவீசிகொண்டு இருக்கிறது.

30. ஸ்ரீ ராமனுடைய பேரன்பிற்குப் பாத்திரமானவரே! தாங்கள் ஸாது - மஹாத்மக்களைக் காப்பாற்றுகிறீர்கள். அஸுரர்களை அழிக்கிறீர்கள்.

31. தாங்கள் அஷ்டமா சித்திகளையும், நவநிதியங்களையும் எல்லோருக்கும் கொடுக்க கூடியவர். இந்த வரத்தைத் தங்களுக்கு சீதாபிராட்டி அருளியிருக்கிறார்.

32. ஸ்ரீ ராமபிரானுடைய பெயர் என்கிற ரஸாயணம் (ஆனந்தக்கடல்) எப்பொழுதும் தங்களுடைய இதயத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. மேலும் தாங்கள் எப்பொழுதும் அவருடைய திருவடிகளைத் தாங்கி கொண்டு,அவர் தாஸனாக இருக்கிறீர்கள்.

33. யார் தங்களை வழிபடுகின்றனரோ, அவர்கள் ஸ்ரீ ராமனை அடைகின்றனர். அவர்களுடைய பல பிறவிகளில் ஏற்பட்ட துக்கங்கள் அனைத்தும் விலகிப் போகின்றன.

34. அவர்கள் கடைசிக் காலத்தில் ஸ்ரீரகுவீரனுடைய பரமபதத்தை அடைகின்றார்கள். இந்த பிறவியில் ஹரிபக்தன் என்று போற்றப் படுகிறார்கள்.

35. வேறு தேவதைகளுக்கு மனதில் இடம் கொடுக்காமல் ஹநுமானையே வழிபடுவதினால், எல்லாவகையான சுகங்களும் கிடைக்கின்றன.

36. வீரம் மிகுந்த ஹநுமானை நினைக்கிறவர்களுடைய எல்லாத் துன்பங்களும் அழிந்து போகின்றன. எல்லாக் கஷ்டங்களும் முடிவு பெற்று விடுகின்றன.

37. கருணைக்கடலாகிய ராமதூதனே போற்றி! போற்றி! போற்றி! தாங்கள் கருணை மிகுந்த குருதேவரைப்போல, எனக்கு அருள்புரியுங்கள்.

38.   எவர் ஒருவர் இந்த ஹனுமான் சாலீஸாவை நூறு தடவை படிக்கிறார்களோ, அவர்கள் எல்லா பந்தங்களிலிருந்தும் விடுபடுகிறான். அவர்களுக்குப் பரமானந்தம் கிடைக்கும்.

39. இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்க்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும், என்பதற்கு கௌரீ சங்கரரான பரமேஸ்வரன் சாட்சியாக இருக்கிறார்.

40. ஸ்ரீதுளஸீதாஸர் சொல்கிறார்: ஹே ஹனுமான ஸ்ரீசீதா, ராம லக்ஷ்மணர்களுடன் தாங்கள், ஸ்ரீராமனை அடைக்கலமாகக் கொண்டுள்ள என்னுடைய இதயத்தை என்றும் உமது இருப்பிடமாகக் கொள்வீர்களாக! 

தோஹா 3

 

தேவர்களுக்குத் தலைவனே வாயு குமாரனே சங்கடங்களைத் தீர்ப்பவனே மங்கள வடிவினனே தாங்கள் ஸ்ரீசீதாராம லக்ஷ்மணர்களுடன் என்னுடைய இதயத்தில் வசீப்பீர்களாக..

ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் 

 

கோஸ்வாமி  ஸ்ரீ  துளஸீதாஸ்  அவர்களால் இயற்றப்பட்ட  ஸ்ரீ   ஹனுமாந்  சாலீஸா

 

முற்றிற்று.

 

 

 


 

 

 

 

 

 

 

 



Comments

Popular posts from this blog

கந்த சஷ்டி கவசம் - Kandha Sasti Kavasam

SIX SIGMA BASICS - LESSON 1 ( TAMIL VERSION)